Saturday 9 February, 2013

கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் கருத்துச் சுதந்திரம்!


கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் கருத்துச் சுதந்திரம்!
விஸ்வரூபம் படம் வெளியாவதிற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததனை அடுத்து கூட்டப் பட்ட முத்தரப்புப் பேச்சுகளில் முஸ்லிம் சமுதாய மக்கள் மனம் புண்படுமளவிற்கு உள்ள ஆட்சேபகரமான பகுதிகளை நீக்கி விட்டு 7.2.2013 அன்று பல திரை அரங்குகளில் வெளியிடப் பட்டது. அதனைத் தொடர்ந்து கொடுக்கப் பட்ட பேட்டியில்  கமலகாசன் அவர்கள், 'இனிமேல் இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான குரல் எழுப்பினால் இந்திய நாட்டினை விட்டு வெளியேறுவேன்' எனக் கூறியிருப்பது விவாததிற்கு உள்ளானதாக  கருத வேண்டி உள்ளது. 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 14 வின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சட்டத்தின் முன்பு சமம்.  அவர்களுக்கு அரசு சம பாதுகாப்பு வழங்க வேண்டும்  அந்தக் கருத்தினை வலியுறித்தி சட்டப் பிரிவுகள் 15-8, 38,39,46 ஆகியவற்றில் இன்னும் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.அரசியல் பிரிவு 19 வின் படி  சிலக் கட்டுப்பாடுகள் உள்ளன  கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டின் நலனுக்கு, சமுதாய நலனுக்கு மற்றும் பொது மக்கள் நலனுக்கு எதிராக அமையக் கூடாது என்ற கட்டுப் பாடுகள் உள்ளன.
நடிகர் கமலகாசன் எங்களூர் இளையான்குடியின் அருகில் உள்ள பரமக்குடியினைச் சார்ந்த நல்ல கலைக் குடும்பத்தவர் என்பதினை மறுக்க முடியாது. . சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னை வந்தபோது, அவரை அழைத்து பெரிய விளம்பரத்துடன், 'மருதநாயகம்' என்ற சரித்திரக் கதையினை எடுக்க முதல் முயற்சியில் இறங்கினார். அந்த மருத நாயகம் யார் என்று உங்கள் பலருக்குத் தெரியும் . இருந்தாலும் சுருக்கமாக சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்..
ஆங்கிலேயரின் மதுரைப் பகுதி வரி வசூல் செய்யும் தளபதியாக இருந்து,  பின்பு ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்து தன்னையே அர்பணித்த தென் தமிழகத்தின் தன்னிகரற்ற தானைத் தலைவன். அந்த மருதநாயகத்தின் பெயரில் படப் பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே நின்று விட்டது. ஒரு தமிழ் வாரப் பத்திரிக்கையில் அதற்கான காரணத்தினை ஒரு பேட்டியில்  கமலகாசன் , 'சில எதிர்பாராத எதிர்ப்புகளால் நிறுத்தப் பட்டு விட்டதாக' கூறியுள்ளார். . அந்த எதிர்பாராத எதிர்ப்பு என்ன என்று இதுவரை  சொல்ல வில்லை. . அந்த எதிர்ப்பு எங்கிருந்து வந்திருக்கும் என்று உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்து இருக்கும் என நம்புகிறேன். அப்போது பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு குடிபுகுந்து விடுவேன் என்று ஏன் சொல்லவில்லை?
முன்பெல்லாம் சினிமா படங்கள் இயற்கை சூழலில்,  கலைஞர்கள் மிகவும் சிரமப் பட்டு சினிமாப் படங்கள் எடுக்கப்  பட்டதால் படங்கள் தத்ரூபமாக இருந்தன. . நடிகர், நடிகைகள் தங்கள் சொந்தக் குரலில் பாடி , பேசி, ஆடி, நடித்து இருந்தார்கள்.  ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் டூப் போடும் அளவிற்கு தள்ளப் பட்டுள்ளது. இன்றைய ரோபோ போன்ற எந்திர உலகத்தில் கிராபிக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதின் மூலம் கழுதையினைக் கூட குதிரையாக்கி,கிழவிகளைக்கூட குமரிகளாக்கும்  நவீன அற்புத திறன்கள் உள்ளன படைப்பாளிகளிடம். நான் 2001 யில் அமெரிக்கா சென்றபோது லாஸ் எஞ்சலில் உள்ள யுனிவெர்சல் சென்று ஆஸ்கார் விருது வென்ற, 'ஜுராசிக் பார்க்' செட்டினைப்  பார்ததேன்.  ஒரு அரங்கிற்குள் அத்தனைப் படைப்புகளையும் தத்ரூபமாக எடுத்து உள்ளார்கள். ஆகவே கிராபிக் முறையில் படம் எடுப்பதால் அது பிரமாதம் போன்று தெரிகிறது.
விஸ்வரூபம் படத்தில் 'முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரானபோர்' என்ற அமெரிக்காவின் மறு பொய்யான முத்திரையில்  இந்தியாவிற்குள் நுழைய முயர்ச்சித்ததால் முஸ்லிம்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள் என்பதினையும், தமிழக அரசும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து நடந்தது என்பதினை மறுப்பதிற்கில்லை.
உண்மையிலேயே உலகில் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற படம் எடுக்க வேண்டுமென்றால் மேலை நாடுகள் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கூட்டுப் படைகள் செய்த அத்துமீறல்களை உலக மனித உரிமைக் கழகம் படம் பிடித்து ஒரு அறிக்கையாக சமர்பித்து இருப்பதினை படங்களாக திரையிட்டிருக்க வேண்டும். அந்தத் தைரியம் யாருக்குத் தான் வரும்?
அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்:
1) அபுகாரிப், குவாண்டனாமா போன்ற சிறைகளில் கைதிகளை நடத்திய ஈவு இறக்க மில்லாத நடவடிக்கைகள். அந்த கைதிகள் செய்த பாவம் என்ன. அந்நிய படை எடுப்பினை எதிர்த்ததுதான் அவர்கள் செய்த பாவம். அதற்காக அப்பாவி மக்களை தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தி மாக்களாக நடத்தியதுதான் பெரும் கொடுமையிலும் கொடுமை. பயங்கர நாய்களை கைதிகள் மீது ஏவி விட்டது.
2) லிண்டி இங்க்லண்ட் என்ற ஒரு பெண் ராணுவ அதிகாரி நிர்வாணமாக இருக்கும் ஒரு ஆண் கைதியை சங்கிலியால் பிணைத்து இழுத்து வருவது, தன் சக அதிகாரிகளுடன் அந்தக் கைதியின் மீது அமர்ந்து ஆனந்தமாக போட்டோவிற்கு போஸ் கொடுப்பது.
3) ஆப்கானிஸ்தான் நாட்டில் கொல்லப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் மீது மேலை நாட்டுப் படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது.
4) ஆப்கானிஸ்தான் நாட்டில் திருமண விழாவில் கூடி இருந்த பெண்கள், சிறார்கள், பெரியவர்கள் என்ற வித்யாசம் தெரியாது வானத்தில் இருந்து குண்டு மாறிப் பொழிந்து அறுபதுக்கு மேலோரைக் கொண்டது.
5) பாகிஸ்தான் நாட்டில் தணிக்கைச் சாவடியில் பணியிலிருந்த அமெரிக்காவின் படை வீரர் மது அருந்தி போதையில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினையே அழித்து இன்று அமரிக்காவில் நீதி மன்ற விசாரணையில் இருப்பது.
6) லிபியா  நாட்டுப் பெண் பாத்திமா போசார் என்பவர் நாலரை மாத கர்ப்பிணி. அவரை 2004 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிடித்து பல காலம் வைத்து சித்திரவதை செய்தது. அதுவும் கர்பிணிப் பெண்ணான அந்தப் பெண்ணை சங்கிலியில் பிணைத்து ஐந்து நாட்கள் பட்டினிப் போட்டு கொடுமை செய்தது.
7) ஐ.நா.சபையின் ஜெனீவாவை சார்ந்த குழந்தைகள் உரிமைக் கழகம் சமர்ப்பித்த அறிக்கையில்,'அமெரிக்காவின் படைகள் தங்களது போர் நடவடிக்கையால் ஆப்கானிஸ்தானில் நூற்றுக் கணக்கான குழந்தைகளை சாகடித்து விட்டதாக' குற்றம் சாட்டியுள்ளது.
இதுபோன்ற 136 சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் அறிக்கையாக தரப் பட்டுள்ளன. ஏன் அவற்றை எல்லாம் படமாக எடுக்க யாரும் முன் வரவில்லை என்ற கேள்வி உங்களைப் போன்றவர்களுக்கு கேட்கத் தோணுவது இயற்கைத் தானே!


ஒரு நாட்டினை நேசிப்பவர் என்ன இன்னல் வந்தாலும்  எதிர் கொள்ள வேண்டுமே  ஒழிய, அதற்காக யாரும் நாட்டினை விட்டு குடிபெயர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவருமில்லை இந்திய நாட்டில். சிறுபான்மை இனத்தினை சீண்டுவது அதன் பின்பு அதனை தீர்ப்பதிற்குப் பதிலாக கருத்துச் சுதந்திரம் என்ற ஆயுதத்தினை எடுப்பது எந்தளவிற்கு நியாயம் என்று தெரியவில்லை.
அடுத்தபடியாக முண்டாசு கட்டும் தலைவராக வி.எச்.பி. என்ற அமைப்பின் தொகாடிய ஒரு ஆட்சேபகரமான கருத்தினை மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டம் போகர் நகரில் தெரிவித்துள்ளது அனைத்து செய்தித் தாள்களிலும் 6.2.2013 வந்துள்ளது.
அதாவது, 24.2.2012 அன்று ஆந்திரா எம்.ஐ.எம். எம்.ஏ ஒவைசி பேசியதிற்கு பதிலடி என்று, 'இருபது ஆண்டுகளில் காவல்த் துறையினர், தாங்கள் போட்ட ஆட்டத்திணை வேடிக்கை பார்த்தனர். அதன் விளைவு தான் அஸ்ஸாமில் 3000 பேர் கொல்லப்பட்டனர், பிஹாரி மாநிலம் பகல்பூரிலும், மோராடபடிலும், மீரட்டிலும், 2002 இல் குஜராத்திலும் அதே நிலை தான் நடந்தது, அதாவது காவல் துறையினர் வேடிக்கை பார்த்து நிண்டார்கள்' என்கிறார். அவர் கூற்றை உண்மையாக்குவது போல மகாராஷ்டிரா மாநிலம் தூளே கலவரத்தில் தவறான நடவடிக்கைக்கு ஆறு காவலர்கள் கைது செய்து இருப்பதாக செய்திகள் கூறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மலேகன், மெக்க மஸ்ஜித் குண்டு வெடிப்பில் ஒரு ராணுவ அதிகாரி புரோஹிட் சம்பந்தப் பட்டிருப்பதினை பார்க்கும்போது சிறுபான்மை சமூகத்தாரை குறி பார்க்கும் ஒரு பெரிய கூட்டமே இவர் பின்னனியில் இருப்பதாக உங்களுக்குத் தோணவில்லையா? அப்படி பேசி இருக்கும் தொகடியாவினை இன்னும் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஆகவேதான் ஆரம்பத்தில் சொன்னேன், சட்டத்தில் அனைவருக்கும் சமம், சட்டப் படி பாதுகாப்புக் கொடுப்பது அரசு கடமை என்று. அந்த சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உனிமைக் கொடுத்து மைனாரிட்டி சமூக மக்களை மதித்து, அவர்கள் மனம் யாருடைய பேச்சு, எழுத்து, காட்சிச் சுதந்திரத்திளால் பாதகம் வராது பார்த்துக் கொள்வது அரசி சட்டப் படி தலையாய கடமையாகும். எந்தக் கலைஞரும் அந்நிய மேலை நாடுகளின் கைகூலியாக மாறி மைனாரிட்டி சமூகத்தினை கலர்க் கண்ணாடி பார்வையில் சித்தரிக்கக் கூடாது, அத்துடன் அரசும், தொகாடிய போன்ற வி.எச்.பி. தலைவர்கள் வன்முறைத் தூண்டும் பேச்சினில் உடனடி நடவடிக்கை எடுப்பதின் மூலம் நாட்டில் வன்முறையினைக் கட்டுப் படுத்தலாம். அத்துடன் அரசு காவல் துறையினர் தங்கள் கைப்பாவை என்ற எண்ணம் அனைத்து மக்களிடம் நீங்கி அமைதிப் பூங்கா நம் நாடு என்ற பெயருக்கு வழி காட்டும் என்றால் சரியாகுமா?