Tuesday 3 February, 2015

அமெரிக்கா -இந்தியா பாய், பாய்!

                 அமெரிக்கா -இந்தியா பாய், பாய்!
          (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி,ஐ.பீ.எஸ்(ஓ)
இந்திய பத்திரிக்கைகளிலும், எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் இந்த ஆண்டு(2015) தொடக்கத்திலே ஒரு தொற்று நோய் ஏற்பட்டது போல பரபரப்பாக வெளியிடப் பட்ட செய்தி அமெரிக்காவின் ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்திய வருகைதான் என்றால் மிகையாகாது. அதேபோன்ற பரபரப்பு பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலந்த் 14-2-2013 ல் வருகை தந்தபோதோ, பிரிட்டிஷ் அரசின் பிரதமர் டேவிட் கேமரோன்  19-2-2013 ல் வருகை தந்தபோதோ, சீனாவின் ஜனாதிபதி ஜிம் பிங் 17-9-2014 ல் வருகை தந்தபோதோ, அல்லது ரஷ்ய ஜனாதிபதி  புடின் 10-12-2014 ல் வருகை தந்தபோதோ ஏற்படவில்லையே, அது ஏன் என்று உங்களைப் போன்ற படித்த பெருமக்களுக்கு கேட்கத் தோணும். ஆனால் ஒட்டிய வயிறும், கட்டிய கையும், குழிவிழுந்தக் கன்னங்களும் கொண்ட பாமரனுக்குத்  கொண்டுள்ள சாதாரண பாமரனுக்குத் தெரியாதல்லவா?
அமெரிக்காவின் இந்திய தொடர்பு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரிட்டிஸ் அரசின் பிடியிலிருந்து இந்தியாவினை மீட்க நடந்த  விடுதலைப் போரின் பயனாக ஏற்பட்டது. அப்போது இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் கூட்டுப் படை செயல் பட்டது. இந்திய மக்களின், 'கத்தியின்றி, ரத்தமின்றி  சத்தியாகிரக யுத்தம்' பிரிடிஸ் அரசிற்கு எதிராக  தொடங்கியதினைக் கண்டு உலகமே வியந்தது. அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பிரிடிஸ் பிரதமரிடம் 1945 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பேசாமல் விடுதலைக் கொடுத்து விடுங்கள் என்று வலியுறித்தினார். அது தான் முதல் ஆரம்பம்.
சுதந்திர இந்தியாவிற்கு முதல் வருகை தந்த(1959) அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் ஆகும்.
இந்தியாவின் கூட்டுச் சேரா கொள்கை இந்திய நலனுக்கு பின்னடைவு ஏற்பட்டுது எதனால் என்றால் சீனா நம்மீது 1962 ஆம் ஆண்டு படை எடுத்தபோது  எந்த வல்லருசும் இந்தியாவிற்கு ஆதரவாக வரவில்லை. இந்திய மண்ணில் சீனா கண்ட வெற்றி அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு இந்தியா பக்கம் சாய்ந்தது, காரணம் எங்கே சீனா ஆசிய கண்டத்தில் ஒரு வல்லரசாக ஆகிவிடுமோ என்ற அச்சம் தான். அமெரிக்க ஜனாதிபதியாக ஜான் எப் கென்னெடி காலத்தில் நட்புறவின் பயனாக ஏற்பட்டது தான் உத்தரப் பிரதேசம் கான்பூரில் இருக்கும் பிரசித்திபெற்ற பொறியியல் வல்லுனர்களை உருவாக்கிய  ஐ.ஐ.டி கல்வி நிறுவனமாகும்..   
அந்தக் கூட்டுறவு 1970 ஆம் ஆண்டு  நிக்சன் ஜனாதிபதியாக இருந்தபோது முறிய ஆரம்பித்தது. இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ராணுவ பலத்தினை நிரூபிக்க கிழக்கு பாகிஸ்தானில் நடந்த சுதந்திரப் போருக்கு ஆதரவு தெரிவித்து 1971 ஆம் ஆண்டு பங்களாதேஸ் என்ற நாட்டினை சுதந்திர நாடாக்கிய போது, அதனை தடுத்து நிறுத்தி, இந்தியாவினை பயமுறுத்த வங்காள கடல் பகுதிக்கு 'யு.எஸ்.எஸ். எண்டர்ப்ரைசெஸ்' என்ற விமானத் தாங்கிய போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. ஆனால் அமெரிக்காவினால் பங்களா தேஷ் உருவானதினைத் தடுக்க முடியவில்லை.
கோல்ட் வார்' என்ற பனிப்போர் இரண்டு நாட்டிற்கும் நடந்தது. 1998 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியா ராஜஸ்தான் மாநிலம் 'பொக்ரானில்' அணு ஆயுத சோதனை அமெரிக்க உறவில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியா மீது  பொருளாதார மற்றும் ராணுவ தடைகளை விதித்தார். ஆனால் குதுகூலமிட்ட இந்திய பொருளாதார வளர்ச்சியாலும், கொந்தளித்த வர்த்தக வளர்ச்சியாலும், விஞ்ஞானிகளின் ஆர்ப்பரித்த கண்டு பிடிப்புகளாலும், அமெரிக்காவின் தடைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானைத் தவிர ஏனைய நாடுகள் அமெரிக்காவின் கட்டுப் பாடுகளைக் கடைப் பிடிக்கவில்லை. அதனை அறிந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு 2000 ஆம் ஆண்டு வருகை தந்து பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜுபாயுடன் நல்லுறவினை ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில்  2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்பு வலுவான  ஆசிய நாடான இந்தியாவின் ஆதரவு ஆப்கானிஸ்தான் படையெடுப்பின் போதும், அதற்குப் பிறகு அந்த நாட்டின் கட்டுமானப் பணிக்கும்  தேவைப் பட்டதால் இந்தியாவினுடனான நல்லுறவினை அமெரிக்கா வளர்க்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் அதிபராக பாரக் ஒபாமா முதல் தடவையாக ஜனாதிபதியாக வந்தபோது 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கொள்கையால் பாக்கிஸ்தானுடன் உறவினை நெருக்கமாக வைத்துக் கொண்டு 'ஒசாமா பின் லேடன்' தேடுதல் வேட்டையினைத் தொடர்ந்ததால் இந்தியாவின் உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது.
2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்பு அமெரிக்காவின் உதவியினை இந்தியா நாட வேண்டி இருந்தது. இந்தியா அமெரிக்காவின் எதிரான பார்வையில் இருந்த ரஷ்யா, ஈரான், இலங்கை, மாலத்தீவு, பங்களா தேஷ் ஆகிய நாடுகளுடன் நட்புறவு வைத்திருந்ததால் 2009 ஆம் ஆண்டு  ஒபாமா  அமெரிக்காக் கம்ப்யுட்டர் கம்பனிகள் இந்தியா கம்பனிகளுக்கு 'அவுட் சோர்சிங்' என்ற வெளிவேலை தொடர்பான காரியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அமெரிக்காவின் பணம் இந்தியாவிற்குச் செல்கிறது, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை என்பதுதான். அந்த தொய்வான உறவினை சரி செய்ய 2010 ஆம் ஆண்டு பாரக் ஒபாமா முதல் தடவையாக இந்தியா வந்தபோது அவருக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கப் பட்டது. அவருக்குச் சிறப்பு மரியாதைக் கொடுக்குமளவிற்கு இந்தியப் பாராளுமன்ற கூட்டுச் சபையில் 1959 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஐஸ்நோவருக்குப் பின்பு  பாரக் ஒபாமாவிற்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது. அதன் பலன் தான் முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்ற பொது வெள்ளை மாளிகையில் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கு மில்லாத தனி விருந்து ஒன்றினை பாரக் ஒபாமா வழங்கினார். அதன் பின்பு அமெரிக்காவின் தூதரக அதிகாரி தேவயாணி வேலையாள் விசா சம்பந்தமான குற்றச் சாட்டில் மரபிற்கு நேர்மாறாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால் யு.பி.ஏ  அரசின் கடைசி காலத்தில் அமெரிக்காவினுடனான உறவு பாதிக்க ஆரம்பித்தது. அதன் பின்பு பி.ஜே.பி அரசு வந்ததும் பிரதமர் நரேந்திரா மோடி மீது அமெரிக்கா விதித்திருந்த விசா தடை நீக்கப் பட்டு  'மோடிசன் ஸ்கயிர்' என்ற சதுக்கத்தில் இந்திய மக்களால் கொடுக்கப் பட்ட பிரமிக்க வைத்த வரவேற்புனைக் கண்ட அமெரிக்க மக்களின் பிரதிநிதியாக ஒபாமா வந்து இந்திய மக்களையும், பத்திரிக்கையாளர்களையும், தொழில் அதிபர்களையும் கவர்ந்து விட்டார்.
பாரக் ஒபாமா வருகையினால் ஏற்பட்ட பலன்கள் மற்றும் பாதகங்கள்:

1) இந்தியாவின் வளர்ச்சியினைக் கண்டு மேலைய நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
2) அமெரிக்காவின் தொழில் அதிர்பர்கள் இந்தியாவின் திட்டங்களான, 'மேக் இன் இந்தியா'(இந்தியாவில் தொழில் முனைவோம்), 'ஸ்மார்ட் சிட்டிஸ்'(சுறுசுறுப்பான நகரங்கள்), 'ஸ்வாச் பாரத்'(சுத்தமான பாரதம்), மாற்று மின் உற்பத்தி  போன்றவற்றில்  பங்காற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் இடப் பட்டுள்ளது. அப்போது தொழில் அதிபர்கள் தாங்கள் தயார் ஆனால் அரசின் கட்டுப் பாடு இல்லா உதவி உடன் கிடைக்க வழிவகை வேண்டும் என்ற வேண்டுகோளும் இடப்பட்டுள்ளது.
3) அவுட் சோர்சிங் என்ற இந்திய கம்யுட்டர் கம்பனிகளுக்கு விதிக்கப் பட்டு இருக்கும் கடுமையான கட்டுப் பாடுகளை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என்று வேண்டுகோளும் இடப்பட்டது.
ஆனால் உண்மையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய கம்ப்யுட்டர் கம்பனி பொறியாளர்களால் அமெரிக்காவிற்குத் தான் ஒருவகையில் லாபம். ஏனென்றால் அவர்களுடைய வருமானம் மாதமொன்றுக்கு ஐந்து லட்சம் டாலருக்குக் குறைவாக இல்லாவிட்டாலும்  அவர்கள் 'சோசியல் செக்குரிட்டி' என்ற சமூக பாதுகாப்பிற்கான வரி மட்டும் வருமானத்தில் நாற்பது சதவீதமாகும் என்றால் பாருங்களேன். அவை அத்தனையும் அமெரிக்க மக்குளுக்குத் தான் போய் சேருகின்றது.
பாதகமான நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டால் :
1) இந்தியாவின் அமெரிக்க விசுவாசத்தினைக் காட்ட முதல் தடவையாக பாரதப் பிரதமரே புது டெல்லி விமான நிலையத்தில் ஒபாமாவை வரவேற்று உள்ளார். அது ப்ரோடோகாலை விட்டு சற்று விலகி இருப்பதாக கருதப் படுகிறது.
2) நட்பு நாடான ரஷ்யா, அண்டை நாடான சீனா ஆகியவை கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் இந்தியாவினைப் பார்க்கத் தொடங்கி உள்ளன.
3) அணு ஆயுத உடன்படிக்கை வெளிவராத நிலையில் எங்கே இந்தியா அணு ஆலை சிதைவினால் இந்திய மக்களுக்கு'லயாபிலிடி' என்ற இழப்பு நஷ்ட ஈடு கிடைக்க வழிவகை செய்யவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் எதிர்க் கட்சிகள் உடன்படிக்கை இரகசியத்தினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என குரல் எழுப்பி உள்ளன.
4) ஒபாமாவின் தரிசனம் கிடைக்க ரட்டன் டாட்டா, முகேஷ் மற்றும் அணில் அம்பானி, பிர்லா போன்ற பிரபல தொழில் அதிபர்கள் க்யூவில் திருமண தம்பதிகளை வாழ்த்த வருசையில் நின்றது போல நின்ற காட்சி ள்ளது  பத்திரிக்கைக் காட்சி வெளிவந்ததினைப் பார்த்த பெரும்பாலான இந்திய மக்களை முகம்  சுளிக்கச் செய்துள்ளது என்றால் மறுப்பதிற்கில்லை.
எப்படி இருந்தாலும் பாரக் ஒபாமாவின் இந்தியப் பயணம் இந்திய மக்களைப் பற்றிய நல்லெண்ணம் இன்றுபோல் என்றும் இருந்தால் நலம்தானே!



No comments:

Post a Comment