Tuesday 8 November, 2016

பொது சிவில் சட்டம்-நேற்று, இன்று, நாளை

பொது சிவில் சட்டம்-நேற்று, இன்று, நாளை
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச், ஐ.பீ.எஸ்(ஓ)
உச்ச நீதி மன்றம் ஒரு வழக்கில் அரசியல் சட்டம் 44ல் கூறியபடி சீரான சிவில் சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது என்று ஆராய்ந்து ஒரு அறிக்கையினை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு  ஆணையிட்டதால் அது சம்பந்தமாக ஒரு மாபெரும் கிளர்ச்சியை முஸ்லிம் சமுதாய மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் சட்டம் 44 என்ன சொல்கிறது என்றால், 'அரசு, இந்திய ஆட்சிப் பரப்பு எங்கனும் ஒரே ‘சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம்’ குடிமக்களுக்கு உறுதியாகக் கிடைக்குமாறு பெரு முயற்சி செய்தல் வேண்டும்'. அதனையே தான் இன்று இருக்கின்ற பி.ஜே.பி மத்திய அரசு ‘பொது சிவில் சட்டம்’ வேண்டும் என்று கூறுகிறது.
ஆங்கிலேய ஆட்சியில் ஹிந்து சமுதாயத்தில் புரையோடிய சமூக பழக்க, வழக்கங்களான குழைந்தை பலியிடல், கணவன் இறந்து விட்டால் மனைவி உடன் கட்டையேறுதல், விதவை மறுமணம் புரியும் தடை, குழந்தை திருமணம் ஆகியவற்றை  தடை செய்ய சட்டங்கள் இயற்றப் பட்டன. மற்றபடி மத சம்பந்தமான பழக்க வழக்கங்களில், சட்டங்களில் நடுநிலைக் கொள்கையினையே கடைப் பிடித்து வந்திருக்கின்றது என்றே சொல்லலாம்.
சுதந்திர இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் கூடிய அரசிலமைப்பு சபை மத சம்பந்தமான சுதந்திரத்தினை சட்டம் 25 முதல் 30 வரையிலுள்ள சட்டங்களில் வழங்கியுள்ளது. சுயமான செயல் அதிகாரங்களைக் கொண்ட உச்ச நீதிமன்றம் சமூக சீர்திருத்தம் என்ற போர்வையில் தலையிட்டது. அரசியல் அமைப்புச் சட்டம், தீண்டாமை ஒழிக்கவும், பலதார மணத்தினை தடுக்கக் கூடிய ஹிந்து சட்டத்தினையும், பெண்கள் சொத்துரிமைக்கும், கலப்பு திருமணங்களுக்கும் சட்டம் ஏற்ற வகை செய்து மத சுதந்திரம் வளர வகை செய்தது.

அரசியல் சட்டம் 25 மதங்கள் தங்கள் வழிபாடுகளையும், செயல் முறைகளையும், செயல்பாடுகளை நிறைவேற்ற உரிமை வழங்குவதோடு, அத்துடன் பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நல வாழ்வு அரசு கட்டுப் பாடுகளுக்குட்பட்டு தங்கு தடையின்றி சமயத்தை வழி நடத்திச் செல்ல உரிமை வழங்கியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் 30ல் மைனாரிட்டி மதத்தினவருக்கும், மொழியால் மைனாரிட்டியானவர்களுக்கும் கல்வி  நிலையங்கள் அமைத்து அதனை பரிபாலனம் செய்வதற்கு உரிமை வழங்கப் பட்டுள்ளது.  ஒரு காலக் கட்டத்தில் டாக்டர்  அம்பேத்கார் அவர்களே மத சுதந்திரத்திற்கு மேலாண்மையாக சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்று சொல்லி பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டார். ஆனால் அதனை முஸ்லிம்கள் மட்டும் எதிர்க்கவில்லை, மாறாக ஹிந்து மகாசபா உறுப்பினர்களே எதிர்த்தார்கள் என்றால் ஆச்சரியமாக உங்களுக்கு தெரியவில்லையா? முஸ்லிம்கள் தங்களுடைய குடும்பச்சட்டம் மற்றும் சொத்துரிமையினையும்  தங்கள் மார்க்கத்தில் சொல்லியுள்ளபடியே கவனித்துக் கொள்வதாகவும், மொழி மைனாரிட்டுகளும் தங்கள் மொழியில் கல்வி நிலையங்கள் அமைத்து அதனை பரிபாலனை செய்ய தங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று கடுமையாக எதிர்த்ததினால் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதினை அப்போது விட்டுவிட்டார் டாக்டர் அம்பேத்கார்.
            மும்பையில் போஹ்ரா ஜாதியினரின் தலைவர் ஒரு உறுப்பினரை தன்னுடைய சமயத்திலிருந்து  நீக்கிவிட்டார். அதனை எதிர்த்து அந்த உறுப்பினர் உச்ச நீதி மன்றத்திற்கு சென்றார். அப்போது உச்ச நீதிமன்றம் தாவூதி போரா தலைவர் தன்னுடைய சமய தனி சட்டத்தினை அமல் நடத்த அவருக்கு உரிமை உண்டு என்று கூறி விட்டது.
            அதேபோன்று ஒரு சமயம் இந்தியா முழுவதும் பசுவதை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது. அப்போது உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் பசுவினை கொள்ளும் தடைச் சட்டம் மனித வாழ்விற்கு எதிரானது என்று அறிவித்து விட்டு, அதே நேரத்தில் இளமை மற்றும் திடகார்த்தமான பசுக்களை கொல்வது   விவசாயத்திற்கும், பால் பொருள் உற்பத்தியினை பாதிக்கும் என்று அதனை தடை செய்யலாம் என்று நடு நிலையான தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம் மனுதார் ஒருவர் மாடுகள் பலியிடுவதினை தடுப்பது தாங்கள் பக்ரீத் பண்டிகைக்காலங்களில் அறுத்து பலியிடும் மார்க்க உரிமையினைப் பாதிக்கும் என்பதனையும் உச்ச நீதிமன்றம் ஏற்று அனுமதி வழங்கியது மூலம் ஒரு நடுநிலையானக் கொள்கையினை வழிவகுத்துள்ளது.
            அரசியலமைப்பு சட்டம் இயற்றும் போது ஏற்பட்ட அதே சர்ச்ச்சை இன்று மைனாரிட்டி மதத்தினர் தனிச் சட்டத்தில் கைவைக்கும் நிலை 65 ஆண்டுகளுக்குப் பின்பு ஏற்பட்டுள்ளது. அரசிலமைப்பு சட்டம் இயற்றும் போது இந்தியாவில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்லும்போது மெஜாரிட்டி இனத்தினரின் ஆதிக்கம் மைனாரிட்டியினரின் மீது திணிக்கப் படும் முயற்சி என்று முஸ்லிம், கிருத்துவர்கள், பார்ஸீஸ் மற்றும் யூத மக்கள் எதிர்த்தனர். இன்றைய சர்ச்ச்சைக்கு காரணமே முஸ்லிம்கள் பலதார மனம் மற்றும் முத்தலாக் முறை எதிர்ப்பதாகும். மற்றொரு சர்ச்ச்சை என்னவென்றால் இஸ்லாமிய சட்டத்தில் உள்ள தலாக் சொல்லப் பட்ட பெண்ணுக்கு கணவன் ஜீவனாம்சம் அவள் ‘இத்தா’ இருக்கும் வரையும் மற்றும் அவர் கொடுக்க வேண்டிய ‘மகர்’ பற்றியும் தான். அது ‘ஷா பானு’ என்ற பெண் தன் ஜீவனாம்சம் கேட்டு முன்னாள் கணவரிடம் வழக்குத் தொடர்ந்ததால்(1980) ஏற்பட்டது.
            பலதார மணம் இஸ்லாமிய அமைப்பில் இருப்பதினை சாதகமாக பயன் படுத்தி ஒரு ஹிந்து மத நபர் ‘சரியா முட்கள்’ முதல் ஹிந்து மனைவி இருக்கும்போது இஸ்லாமிய மார்க்கத்தில் தழுவி இரண்டாம் திருமணம் செய்ததால் ஏற்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர் குலதீப் சிங் முதல் ஹிந்து மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது மனைவியினை அடைவதிற்காகவே முஸ்லிமாக மாறி திருமணம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
            இது நாள் வரை முஸ்லிம்களின் மார்க்க சம்பந்தமான நடைமுறைகளில் மத்திய மாநில அரசுகள் தலையிட தயக்கம் காட்டியதுடன், ஒரு நடு நிலையான கொள்கையினை கொண்டிருந்தனர். ஆனால் மத்தியில், மற்றும் மாநிலங்களில் சிலவற்றில் பி.ஜே.பி அரசுகள் அமைந்த பின்னர் முந்தைய அரசுகள் முஸ்லிம்கள் ஓட்டு வங்கிக்காக அவர்களை தாஜா செய்யும் விதமாக அவர்கள் சட்டத்தில் அல்லது சடங்குகளில் தலையிடவில்லையென்று குற்றம் சாட்டி எப்படியும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பொது சிவில் சட்டத்தினை கொண்டு வர முயல்வதால் இன்று முஸ்லிம்களிடையே ஒரு கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது என்பதினை மறுக்க முடியாது. ஆனால் சட்ட ஒழுங்குமுறை என்ன சொல்கிறது என்றால் மத வேறுபாடுகளிடையே அரசு நடுநிலையான கொள்கையினை பொறுமை உணர்வுடன் கடைப் பிடிக்கவேண்டும் என்று. ஆனால் அதற்கு நேர் மாறாக  அரசுகள் பள்ளிகளில் மத சம்பந்தமான கல்வி போதனைகளை எப்படியும் தடை செய்து விட வேண்டும் என நினைக்கின்றது.  அரசு எந்த கல்வி நிலையங்களில் தனது ஆதிக்கத்தினை செலுத்த முடியுமென்றால், எந்த கல்வி நிலையம் அரசு முழு உதவியினைப் பெறுகின்றதோ அதில் தான் தலையிட முடியும். அரசின் பகுதி உதவி வழங்கப் பட்ட கல்வி நிலையங்களில் அரசு தலையிடமுடியாது.
            இதில் அதிகமாக பாதிர்ப்புக்கு உண்டானது கிருத்துவ மதம்  தான். ஏனென்றால் சங் பரிவாரினைச் சார்ந்தவர்கள் கிருத்துவர்கள் அரசு உதவியினை வாங்கி அதனை மதமாற்றத்திற்கு பயன் படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி கிருத்துவ வணக்க தளங்கள், அவர்கள் தங்கி போதனை செய்யும் நிலையங்கள் ஆகியவை ஜார்க்கண்ட், ஒரிசா, குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தாக்குதல் ஈடுபட்டனர். சில வலது சாரி அமைப்புகள் அங்குள்ள கிருத்துவ மக்களை மறுபடியும் ஹிந்து மதத்திற்கு மாற்றும் சடங்குகளிலும் ஈடுபட்டனர்.
            ஆனால் எப்போது அரசியல் அமைப்பில் மதத்திற்கு  சமமான பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதோ  அது வரை பொது சிவில் கோடு அமைப்பதில் சாத்தியமில்லை. இந்திய நீதித்துறையும் சமத்துவ சமுதாயத்திற்கு சமமான அளவு மரியாதை அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப் பட்டுள்ளதினை வலியுறுத்தியுள்ளது என்பதினை பல வழக்குகளில் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மை ‘ஜனதா தல்’ அரசு 1989 ஆம் ஆண்டு நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் பி.ஜே.பி ரத யாத்திரையினை தொடங்கியது. அதனை தடுக்கத் தவறியதால் கர்நாடக அரசு மத்திய காங்கிரசு அரசால் கவிழ்க்கப் பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் இந்த நடவடிக்கை சட்டசபையில் பலத்தினை நிரூபிக்காமல் கவிழ்த்தது செல்லாது என்று அறிவித்ததுடன், மாநில அரசு மக்களிடையே மத சம்பந்தமான எந்த வெறுப்பினையும் ஏற்படாது, மதச்சார்பின்மையினைக் கடைப் பிடிப்பது அவசியம் என்று மாநில அரசுக்கும் ஒரு கொட்டு வைத்தது.
            முஸ்லிம்களின் தனிச் சட்டம்
முஸ்லிம்களின் தனிச் சட்டத்தினைப் பொறுத்தமட்டில்(ஷரியத்) கொள்கையளவில், கடைப் பிடிப்பதிலும் பல மாறுபட்ட கருத்துக்கள் ஷியா பிரிவினருக்கும், சுன்னி பிரிவான ஹனபி, மாலிகி, ஷாபி மற்றும் ஹம்பிளி பிரிவினருக்கும், அவர்களுடை உள்  பிரிவுகளான வஹாபி, அஹ்லேஹதித், டியோபண்ட் பரேலவி ஆகியோருடைய பண்பாடுகளுக்கும் உள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய தனி பண்பாட்டின் நடவடிக்கைகள் ஷரியத் சட்டங்களுக்கு முரணாகவும் உள்ளது என்று சொல்லப் படுகிறது. இருந்தாலும் பல பிரிவுகள் முஸ்லிம்கள் நலன்களில் ஒன்றிணைக்க ஆகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம்(AIMPLB)கூறும் தீர்ப்பிற்கு ஒரு மரியாதை, மதிப்பு உண்டு.
ஆங்கிலேய அரசு 1939ம் வருடம் ஷரியத் செயல்படுத்தும் சட்டம் கொண்டு வந்தது( Shariyat Application Act). ஆனால் இந்தியா ஒரு மத சார்பட்ட நாடு ஆனதாலும், இஸ்லாம் இந்திய நாட்டின் மதமில்லையானதாலும், கலீபா இல்லாததாலும், நீதிபதிகள் முஸ்லிம்கள் இல்லாததாலும் மேற்படி சட்டத்தினை நிறைவேற்ற முடியாமல் போனது.
            தற்போது உள்ள பிரச்சனையே ஒரே தடவை, முத்தலாக் சொல்வது செல்லுமா என்பது தான். அதனைக் காரணம் காட்டி பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்ற கொந்தளிப்புத்தான் முஸ்லிம்களிடையே.
தலாக் என்பது இஸ்லாத்தில் ஒரு வழக்கு நடவடிக்கைத் தொடக்கம் தான்.  இந்த நடவடிக்கை மூன்று மாதங்கள் தொடரப்படும். அதுவும் சாட்சிகள் முன்னிலையில், சமரசத்துடன் நடத்தப்படும் செயல் முறை. அதனை ஒரே மூச்சில், சாட்சிகள் இல்லாமல் வழங்கப் படும் நடவடிக்கை என்பதினை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. அதுவும் பெண்களுக்கு இழைக்கப் படும் மாபெரும் கொடுமை என்றால் மறுக்க முடியாது. அதனை பெண்களுக்கு உரிமை வாங்கித்தந்த இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் போதித்ததல்ல.
            இஸ்லாமிய மார்க்கத்தினர் மேலாக சொல்லப் படும் மற்றொரு குற்றச்சாட்டு பலதார மணம்.  இஸ்லாத்தில் பலதார மணம் புரிய வேண்டுமென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமானவர் தன் மாணவியருக்கு உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் திருப்தியான வாழ்க்கை முறையினை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப் பட்டது. அதனால் 95 சதவீத முஸ்லிம்கள் ஒரே மனைவியுடன் வாழவதினைக் காணலாம். அதே நேரத்தில் மெஜாரிட்டி மதத்தினர் பல மனைவிகள் சகிதமாக மனைவியாகவும், துணைவிகள் பலருடனும் பகிங்கரமாக வாழ்க்கை நடத்துவதோடு மட்டுமல்லாமல், அதனை பெருமையோடும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். சமீபத்தில் மிசோராமினைச் சார்ந்த ஒரு ஹிந்து 39 மாணவிகளுடன், ஒரு பட்டாள  குடும்ப படத்துடன் பேட்டிக் கொடுத்தது பத்திரிக்கைகளில் வந்தது.
            சட்டங்கள் பாதுகாப்பு:
Special Marriage Act,1954, சட்டத்தின் படி அனைத்து முஸ்லிம் திருமணங்களும் பதிவு செய்யப் படுகின்றன. ஆகவே பதிவு செய்யாமல் துணைவியாக சிலரை வைத்துக் கொள்ள சட்டம் ஒரு போதும் அனுமதி வழங்க வில்லை.
அதே போன்று Muslim women(Protection of Rights and divorce) Act, 1986, அரசினை முஸ்லிம்களின் தனிச்சட்டத்தில்(ஷரியத்) உள்ளது படி விவாகரத்து செய்யப் பட்ட பெண்களுக்கு நியாயப் படி ஜீவனாம்சம் கிடைக்க வழி செய்கின்றது.
            இஸ்லாமிய அமைப்புகள் பலவாறு இருப்பதாலும், இந்திய நாட்டில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் செயல் படுத்த முடியாததாலும், அரசும், நீதி மன்றமும் இஸ்லாமியர் நாடியினைப் பிடித்துப் பார்க்க செய்யப் படும் முயற்சிதான் பொது சிவில் கோடு என்ற முழக்கம். ஆனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண பிரச்சனை, சொத்துத் தகராறு, பலதாரத்தால் விளையும் குடும்ப தகராறு, பள்ளிகளை நிர்வகிப்பது போன்ற தகராறுகளை தீர்க்க நீதி மன்றங்கள் உள்ளனவே, பின் ஏன் பொது சிவில் கோடு என்று சிந்திக்க வேண்டு மத்தியில் உள்ள அரசு.
அறிஞர் பெருமகன் ஜார்ஜ் பெர்னாட்ஸா, 'ஆண் திருமண பந்தத்திற்காக வழக்கிடுகிறான் ஏனென்றால் அது ஒரு சுகத்திற்காக, மாறாக பெண் அது ஒரு ஜீவன ஆயுதமாகும் என்று கருதுகிறாள். சொத்தில்லாத மனைவிக்கும், தனித்திறன் இல்லா மனைவிக்கும் கணவன் என்ற அந்தஸ்து ஒரு நாயின் எஜமானைப் போன்றது தான்' என்று சொல்கிறார். 
            இந்தியாவில் முஸ்லிம்கள் அல்லாது, கிருத்துவர்கள், சொராஸ்டரின் மக்கள், யூதர்கள் தங்களுக்கென்று தனிச் சட்டம் கொண்டுள்ளன.
மெஜாரிட்டி ஹிந்து மக்கள், ஜைன மதத்தவர், புத்த மற்றும் சீக்கியர் ஒரே குடும்ப சட்டமான Hindu Personal Law(25(2)(b) ல் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.  இது சம்பந்தமாக உச்சநீதிமன்றமும் 2005ல் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருத்துவர்களுக்கு Christian Marriage Act,1872 and Indian Divorce Act, 1869) ஆகிய சட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.
ஸ்ரஸ்ட்ரியனிசம் மதத்தினை வழிபட்டவர் பார்சி இனத்தவராக கணக்கிடப் பட்டார். அவர்களுக்கென்று Parsi Marriage and Divorce Act,1936 கொண்டு வரப்பட்டது.
            சைனா நாட்டு பேரறிஞர் கண்ப்ஸ்சிஸ் சட்டங்கள் பற்றி , 'இயற்கை சட்டமே மிகவும் சிறந்தது என்று கூறுகிறார்.
செயற்கையாக சட்டங்களான குழந்தைகள் நரபலி தடுக்க முடிந்ததா?
28.9.2016 கூட அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு குழந்தையை ஒரு டாக்டர் செல் போன் காணாவில்லை, கண்டுபிடித்துத் தர ஒரு மந்திரவாதியினை நாடியதும், அந்த மந்திரவாதி 4 வயது பெண் குழந்தையினை நரபலி இட்டதும் பத்திரிக்கை செய்தியாக வந்துள்ளது. 5 வருடங்களில் 132 நர பலிகள் நடந்துள்ளன.
அதுபோல குழந்தை திருமணங்கள் தடுக்க முடிந்ததா? ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த திருமண மேளாவில் வெறும் குழந்தைகளுக்கான திருமணம் ஒரு பி.ஜெ.பி மந்திரி தலைமையில் நடந்ததாக குற்றம் சுமத்தின எதிர்க்கட்சிகள். ஏன் நமது மாநிலத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில்  58.4% திருமணங்கள் குழந்தை திருமணம் என்று சர்வே கூறுகின்றது.
கோவிலுக்குள் இன்றும் தாழ்ந்த சமூதாயம் சரி சமமாக சட்டம் இருந்தும் மேல் ஜாதியினருடன் செல்ல முடிகிறதா?
ஆகவே இது போன்ற இருக்கின்ற சட்டங்கள் அமல் படுத்துவதினை விட்டு விட்டு, வேலை மெனக்கெட்டு பொது சிவில் சட்டம் கொண்டே தீருவேன் என்ற அரசியல் கோஷமிடுவதா நாட்டை ஆளும் முறை!
மற்றொரு சீன அறிஞர் லாவோ சி, சட்டம் அதிகமானால் திருடனும், போக்கிரியும் தான் அதிகம் ஏற்படுவர்'
ஆகவே கண்ப்ஸ்சிஸ் சொல்லியபடி ஏக அல்லாஹ்வால் இறக்கப் பட்ட இயற்கையான சட்டம் கொண்ட ஷரியத் சட்டம் தான் சிறந்தது என்று ஆட்சியாளர்களுக்கு ஏன் தோணவில்லை!
அதனால் தான் இஸ்லாமிய மக்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர். தமிழ் நாட்டில் ஏற்படுத்துகின்ற எழுச்சி பாராட்டத்தக்கது. பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, கையெழுத்து இயக்கம் என்று ஒன்று திரண்டுள்ளனர். ஆனால் ஒரு குழுவினர் மட்டும் எப்போதும் போல  'என் வழி தனி வழி' என்று பிரிந்து கோசம் எழுப்புகின்றனர்.
உலகில் தான் தான் அறிவாளி மற்றவனெல்லாம் மூடர்கள் என்று நினைக்காமல், ஈகோ பிரச்சனை பாராமல் ஒருங்கிணைந்து குரல் எழுப்புவதோடு, அகில இந்திய முஸ்லிம் சட்ட போர்ட் கூட இணைந்து உச்ச நீதி மன்றத்தினை  நியாயத்திற்கும், சமுதாய நன்மைக்காகவும் போராட வேண்டுமா அல்லது வேண்டுமா என்பதினை உங்களிடமே விட்டு விடுகிறேன்!